நிறம்

Paint Brushes

வண்ணங்கள் தூவி வானவில் வரைந்தாள். வண்ணங்கள் சொல்ப்பேச்சைக் கேட்பது போல எண்ணங்கள் படியவில்லை. மனம் போன திசையில் தூரிகையும் போனது. இவள் நினைக்கும் முன்னரே வேறு வண்ணம் தொட்டது. தன்னிலை மறந்து லயித்தால். ஓவியம் உருவானது. மனம் விழித்தாள். தூரிகையின் வண்ணம் தாண்டி தெரிந்த ஓவியம் கண்டாள். என்னவொரு ஆச்சர்யம், அது ஒரு வாலிபனின் உருவம். இதுவரை பார்த்திராத உருவம்.

நின்று யோசித்தாள்! யாராய் இருக்குமென்று. ஒன்றும் புரியவில்லை புலப்படவுமில்லை. யோச்னையை விட்டொழித்து வேலை பார்க்க சென்றாள். அன்று பார்க்கும் யாரேனும் அந்த உருவத்தோடு ஒத்துப்போகிறார்களா என்று பார்த்தாள். இல்லை யாரும் அவனாக இல்லை. வீடு திரும்பினாள்.

கலைப்பு மிகுதியால் தேனீர் அருந்தினாள். தொலைக்காட்சி பார்த்தாள். உண்டாள் பிறகு உறங்க சென்றாள். கனவில் உருப்பெற்றது ஓவிய உருவம். அது தன்னை தானே அறிமுகம் செய்தது. என்னை இன்று முழுதும் தேடினாய் போல இருக்கிறதே! நானிவ்வுலகில் எங்கும் காணக்கிடைக்க மாட்டேன் ஏனென்றால் நான் உன்னால் உருவாக்கப்பட்டவன் என வார்த்தைகளைத் துப்பியது. உறைந்து போய் கவனித்தாள். உறக்கம் கலைந்து விழித்துப்பார்த்தாள் ஓவிய மேஜையை.. அதோ அங்கே அவனிருக்கவில்லை. எங்கே போனான்?! அங்குமிங்கும் தேடினாள். மீண்டும் உறங்கினால் அவன் பேசவருவான் என்று நினைத்தாள். அவன் அங்கும் வரவில்லை. தொலைத்துவிட்டோமே என பதறினாள். தூரிகை எடுத்து மீண்டும் வரைய முயற்சித்தாள் ஆனால் ஏனோ அவன் இவள் வசப்படவில்லை.

நிறமெல்லாம் தீர்த்தாள். ஏதேதோ வரைந்தாள். காலம் கடப்பதறியாமல் தூரிகை தூக்கினாள். அவன் எதிலும் சிக்கவில்லை. கண்ணீர் மல்கினாள், யாசித்தாள், பிராத்தித்தாள், கோபித்தாள், கனவில் அவன் சொன்ன வார்த்தையை வாசித்தாள். கலங்கி கலங்கி கலைத்தாள்.. உறங்கிப்போனாள். நிறம் குன்றாமல் குணம் மாறாமல் உருக்குலையாமல் வந்து உக்கார்ந்தான் அவன். கண்ணத்தில் மட்டும் ஒரு துளி கண்ணீர். என்னாச்சு எங்க போன என்றாள். உன்னுடன் உன் கட்டிலில் தானே இருந்தேன். நீதான் தூக்கம் கலைந்து விழித்த போது உன்னையுமறியாமல் என்னை கீழே தட்டிவிட்டாய். நானிருக்குமிடம் தவிர எங்கெல்லாமோ தேடினாய். அப்புறம் என்மீதே கண்ணீர் சிந்தி அழுதாய், பின் கலைத்துப்போய் உறங்கினாய். நான் மீண்டும் வந்தேன் என்றான். உளமகிழ்ந்து உச்சிமுகர்ந்து உற்சாகமாய் உரையாடினாள் தான் உருவாக்கிய தன் செல்வத்தோடு.

Advertisements